Saturday, February 13, 2010

இடரின்றி வென்றிடுவேன்


கற்பனை உலகில்
கட்டற்று பறக்கிறது மனம்
காரணம் இதற்கு
காதலியே நீதான்

பார்வை ஒன்றே
பாருள்ளவரை போதுமென்றிருந்தேன்
சிறு வார்த்தைகள் பேசிப்பேசி
சித்துப்பிடிக்கச்செய்தாய்
விடைபெறும்போது நீ
விடுத்த சைகியில் என்னிடமிருந்து
விடைபெற்றது இதயம்

இனிமேல் நீ
வெட்கப்படவேண்டாம் ஏனெனில்
வெளுத்துப்போகின்றது உன்சாயம்
தலைசரித்து நீ சிரித்தபோது
தன்னிலை மறந்தேன் நான்
குறிப்பறிந்து நீ
குறியிசையால் அழைத்தபோது
உளறிக்கொட்டி
உவகைப்படுகிறேன் நான்
வாழ்வதற்காய் நீ
வாழ்த்துகையில்
அக்கணமே ஆகிறேன்
அகிலத்தினதிபதியாய்
ஊட்டிவிடுமாறு நான்
உனைக்கோரியபோதும்
என்னுடைய அவளிடம்
எடுத்தியம்பக்கூறி
உனது உளமனதுணர்வுகளை
ஊசியின்றி இரத்தத்தில் கலந்தாய்
அவள் யாரென்பதை
அறியாயா நீ எனக்கேட்க
அழகு முகம் காட்டிற்று
அற்வாய் நீ என்பதையும்
அதை நான் உரைக்க
காத்திருக்கிறாய் நீ என்பதையும்
காட்டினேன் சைகையால் ஆயினும்
வாய்திறந்து சொல்ல
வார்த்தைகள் வெளிவரவில்லை
தொக்கி நின்ற வார்த்தைகளில்
தொல்லைகளின்றி உனைக்காக்க
தேவையானதையெல்லாம் நான்
தேடிக்கொள்ளவில்லை என்பது
பொதிந்திருததை அறிவாயோ நீ?
உன்னுடையவன் நான் என்பதை
உணர்த்தவா ஊட்டினாய்
உடலுக்கு பலம் சேர்க்கும்
உணவு அன்று என்
உணர்வுகட்கு
பலமூட்டியதால்
இனிவரும் நாட்களை
இடரின்றி வென்றிடுவேன்

Thursday, December 10, 2009

இலக்கு வைத்து வாழ்வதால்..கத்தில் இப்போதெல்லாம்
சிக்கல்கள் பெருகி எனை
பாடாய்ப்படுத்துகின்றன

அகிலம் என் உயிர்
ஸ்தலத்தில் ஏறியதுபோல்
மத்தியிலகப்பட்டு
அவஸ்த்தைப்படுகிறேன் நான்

உனை ஒரு பொழுது பார்க்காவிடினும்
உடைந்து போகிறேன் நான்
சிதறிய சில்லுகளையெல்லாம்
சிக்கல் இன்றி நீ
ஒரு பார்வையால்
ஒட்டிச்செல்வது மீண்டும் சிதைக்கவோ?

ஒருவனாய் இவ்வுலகில்
ஓய்வின்றி ஓடித்திரிகையில்
பிரச்சினைகள் என்றொரு
பிரச்சினை இருக்கவில்லை
இன்றோ
தள்ளிவைக்க எனக்கு
திராணியில்லை என்பதால்
தொண்டையை நெருக்கி
தள்ளிக்கொண்டு நிற்கின்றன
சொல்லிக்கொள்ள முடியாமல்
அல்லல் படுகிறேன் நான்
நாளைய நாள்கூட நினைவின்றி
இன்றைய நாளை வாழ்ந்தேன்
இருபத்தாறு வயதுக்கு
இலக்கு வைத்து வாழ்வதால்
இன்றைய நாளைக்கூட
இழந்து நிற்கின்றேன்

Wednesday, December 9, 2009

கடைக்கண் பார்வையில்


கடைக்கண் பார்வையில்
களவுபோயிற்று என்னிதயம்
களவுபோன இதயத்தின்
கதை சொல்ல வந்தவனை
இமைமுடிச்சிறைக்குள்
இரக்கமின்றி அடைத்தாய்
வதைபடும் நான் உன்
வருகைக்காக காத்திருக்கக்கண்டு
உனக்குள்ளேயே நீ
உவகை கொள்கையில்
எனக்குள் பெருகிடும்
எல்லையில்லா இன்பம்
கல்லில் கூட கண்டான்
கடவுளை மனிதன்
எச்செயலும் எப்பொருளும்
எனக்கு உனை காட்டியபோதே
உணர்ந்தேன் அவனது செயலின்
உண்மை அர்த்ததை
வாழ்வின் பல இலக்குகளின்
வழி தெரியாதிருந்தேன் நான்
திக்கொன்றாய் இருந்த அவை
திரண்டனவே உன்னில்
தாய்தந்தையை விட
தாரமே நீ எனக்கு
ஆதாரமே - இது மனக்கணக்கு
காலத்தினருமையை
காட்டுகிறாய் நீ எனக்கு
அஸ்தமனங்கூட ஏற்படலாம்
மத்தியானத்தில் எனக்கு
ஜனனத்தின் சிறப்பும்
சிதைந்துபோம்
பாவையே நீயின்றேல்


அறிமுகம்


தோற்றுப்போன காதல் அது. அது என் முதற்காதலும் கூட. காதல் என்னவோ ரொம்பத்தான் பிந்திவந்தது எனக்கு. அது ஓராண்டு கூட பிறர் கண்ணுக்கு வாழாவிடினும் எனக்குள் இன்றுவரை ஆண்டுகள் எட்டு கடந்தும் வாழ்கின்றது.

எட்டு  ஆண்டுகளுக்கு முன் தொடர்பாடல் வசதி பற்றி சொல்லவேண்டியதில்லை. அக்காலப்பகுதியில் ஒரு மாணவனாக இருந்த எனக்கு அன்றிருந்த தொடர்பாடல் எதுவும் வசதிக்கு பொருந்தவில்லை. 

எட்டு ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன என் காதலியின் படங்கள்; குடும்பப்படங்களாக இணையத்தில் காணநேர்ந்த கொடூரமும் எனக்கு நடந்தது. தொடர்பாடல் வசதிகளை வாழ்த்துவதா நோவதா என்றுகூட எனக்கு தெரியவில்லை.

என்காத்லின் ஆரம்பத்தில் இருந்து கவிதை எழுதவேண்டும் என்பதற்காகவன்றி சில சமயங்களில் என்க்கு கவிதை போல் தோன்றியவைகளை குறிப்பெடுத்து பாதுகாத்திருந்தேன்.

இனிமேல் அதை பாதுகாக்கும் நோக்கமில்லை என்பதால், என்க்குள் இருக்கும் காதலுக்காக அன்றெழுதிய கவிதைகளை கொண்டே தாஜ்மஹாலாய் வடிக்கிறேன். ஏழை என்னால் அதுதான் முடியும்.

மொத்த கவிதைகளையும் ஒன்றாய் வலைப்பூவிலேற்றினால் உங்களுக்கு வாசிக்க நேரமும் இருக்காது. எனவே எல்லாவற்றையும் துண்டுகளாக்கி ஒவ்வொருநாளும் தானாக மலர்ச்செய்துள்ளேன். ஒரு நிமிடம் வீதம் ஒரு நாளைக்கு என்க்கொதுக்கி என் தாஜ்மஹாலை சிதிலமடையாமல் பாதுகாப்பதற்கும் உங்களையே நம்பியுள்ளேன்.

நண்பர்களே, இணையம் இருக்கும் காலமெல்லாம் என் காதலின் சுவடும் ஒரு தாஜ்மஹாலாய் வாழும்தானே?